மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது


மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது
x

மருத்துவப்படிப்புக்கான சிறப்பு மற்றும் பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்று இடங்களை தேர்வு செய்தனர்.

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான தரவரிசை பட்டியலை மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 17-ந்தேதி வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து கலந்தாய்வு 19-ந்தேதி (நேற்று) முதல் தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப்பிரிவு மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேற்று நடந்தது. இது நேரடி கலந்தாய்வாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு அடிப்படையில் 212 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இந்த இடங்களுக்கு 49 மாணவ-மாணவிகளே விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவரையும் இந்த கலந்தாய்வில் பங்குபெற அழைக்கப்பட்டனர். இதேபோல் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 7 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், ஒரு பி.டி.எஸ். இடங்களும் ஒதுக்கப்பட்டன. அந்த இடங்களுக்கு 216 பேர் தகுதியுடைவர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர்.

பொதுப்பிரிவு

முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டின்படி, 10 எம்.பி.பி.எஸ். இடங்களும், ஒரு பி.டி.எஸ். இடங்களும் ஒதுக்கப்பட்டன. அதற்கு 356 பேர் தகுதி உடையவர்களாக கருதப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் நேற்று நேரடி கலந்தாய்வு காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கலந்தாய்வில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்தனர்.

இதில் தேர்வு செய்து இடங்களை உறுதி செய்த மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மாலை ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார். அதன்படி முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், விளையாட்டு மாணவர்கள் பிரிவில் இருந்த இடங்கள் அனைத்தும் நிரம்பின. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 46 இடங்கள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன.

சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நேரடியாக கலந்தாய்வு நடத்தப்பட்ட நிலையில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. அவர்களுக்கும் நேற்று கலந்தாய்வு தொடங்கிய நிலையில், வருகிற 25-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. 24 மணி நேரமும் இந்த கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்கலாம். அந்த வகையில் தங்களுக்கான விருப்ப இடங்களை மாணவ-மாணவிகள் இதில் தேர்வு செய்யவேண்டும்.

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு...

மாணவர்கள் இடங்களை தேர்வு செய்து உறுதி செய்யும் வரை அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இடங்களை உறுதி செய்து 'சப்மிட்' செய்துவிட்டால், அதை மாற்ற முடியாது. 25-ந்தேதி வரை இதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, முன்னுரிமை, தகுதியானவர்கள் அடிப்படையில் இறுதி முடிவு 30-ந்தேதி வெளியிடப்பட இருக்கின்றன.

இதற்கிடையில் இன்று (வியாழக்கிழமை) அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடக்க இருக்கிறது. இந்த கலந்தாய்வு நேரடியாகவே நடத்தப்படுகிறது. 454 எம்.பி.பி.எஸ். இடங்களும், 104 பி.டி.எஸ். இடங்களும் இருக்கும் நிலையில், இதற்கு 2 ஆயிரத்து 764 பேர் போட்டியிடுகின்றனர். மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண், முன்னுரிமை, தகுதியானவர்கள் அடிப்படையில் இடங்கள் மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளன.


Next Story