மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் எதிர்சேவை நிகழ்ச்சி
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.
மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த கருமலையில் நூற்றாண்டுகள் பழமையான கரிகிரி வரதராஜா பெருமாள் கோவில் உள்ளது. மருங்காபுரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட இந்த கோவில் வகையறாவை சேர்ந்த பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மணியங்குறிச்சியில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான எதிர் சேவை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவே கருமலையில் இருந்து மணியங்குறிச்சிக்கு வந்த வரதராஜ பெருமாள் அங்குள்ள பெருமாள் மண்டபத்தில் இரவில் தங்கினார். பின்னர் நேற்று காலை சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் அலங்கரிங்கப்பட்ட வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பெருமாள் மண்டபத்தில் இருந்து தங்கைக்கு சீர்வரிசை கொடுக்க புறப்பட்டார். அண்ணன் கொண்டு வந்த சீர்வரிசையை பெற்றுக்கொள்வதற்காக அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி அம்மனும் வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டார்.
தாரை தப்பட்டையுடன் ஏராளமான பக்தர்கள் புடைசூழ கோவில் அருகே நந்தவன வீதியில் அண்ணனும் - தங்கையும் எதிர் எதிரே சந்தித்து கொண்டனர். அப்போது பக்தர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மாலைகளை இரு தெய்வங்களின் மீதும் போட்டு பக்தியுடன் வழிபட்டனர். எதிர்சேவை நிகழ்ச்சி முடிந்த பின் வராதராஜ பெருமாள் கருமலைக்கு புறப்பட்டு சென்றார். அதேபோல் மீனாட்சி அம்மனும் மணியங்குறிச்சி கோவிலுக்கு சென்ற பின் ஐதீக வழிபாடுகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கரிகிரி வரதராஜ பெருமாள் கோவில் பரம்பரை அறங்காவலர் ரெங்ககிருஷ்ண குமார விஜய பூச்சய நாயக்கர் தலைமையில் ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.