போலி மது விற்றவர் கைது; 500 'குவார்ட்டர்' பாட்டில்கள் பறிமுதல்
போலி மது விற்றவர் கைது; 500 ‘குவார்ட்டர்’ பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சமயபுரம்:
போலி மது
சமயபுரம் அருகே போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு பொதுமக்கள் புகார் அனுப்பினர். இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று சமயபுரம், கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட், மேளவாளாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சமயபுரம் அருகே உள்ள மேலவாளாடி பெரியார் நகரை சேர்ந்த ராஜா (வயது 47) என்பவர் போலி மது விற்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரை தனிப்படை போலீசார் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் கரூர் பகுதியில் இருந்து போலி மதுபானங்களை வாங்கி சமயபுரம், மேலவாளாடி, கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீண்ட நாட்களாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து 500 'குவார்ட்டர்' மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ராஜாவையும், ேபாலி மதுபாட்டில்களையும் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார், ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை
இதேபோல் வையம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்ற குளத்தூராம்பட்டியை சேர்ந்த பெலிக்ஸ் பெமினியன்(28), கரட்டுபட்டியை சேர்ந்த ஜேம்ஸ் அந்தோணி பீட்டர்(59), எம்.துலுக்கம்பட்டியை சேர்ந்த பிச்சை(49), என்.சீகம்பட்டியை சேர்ந்த சக்திவேல், அணைப்பட்டியை சேர்ந்த ஜெயமேரி(55) ஆகிய 5 பேர் மீது வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மணப்பாறை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் சட்ட விரோதமாக மது விற்ற கீழ எண்ணெய் பகுதியை சேர்ந்த செல்வம்(27), மஞ்சம்பட்டியை சேர்ந்த சூசை(47), வடக்கு லட்சுமிபுரத்தை சேர்ந்த கார்த்திக்(35) ஆகிய 3 பேர் மீது மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
திருவெறும்பூர்
திருவெறும்பூர் பகுதியில் தனிப்படை போலீசார் திருவெறும்பூர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவெறும்பூர் கக்கன் காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்த ராமு (67), ராகவேந்திரா நகர் 3-வது தெருவை சேர்ந்த செல்வராஜ் (67), மலைக்கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (62), நவல்பட்டு சாலை காந்தி நகரை சேர்ந்த சுரேஷ் மனைவி ரேவதி (40), கக்கன் காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்த சாந்தா (68) ஆகிய 5 பேர் மது விற்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் பிடித்து, திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.