செங்கல்சூளையில் கள்ளக்காதலி கொலை
ராஜபாளையம் அருகே செங்கல் சூளையில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே செங்கல் சூளையில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பெண் கொலை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங் கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 50). செங்கல் சூளை உரிமையாளர். இவர் தனது மனைவியை பிரிந்து வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த பாப்பையன் என்பவரது மனைவி காளீசுவரி (வயது 40). கூலி தொழிலாளி. இவர் முத்துசாமியின் செங்கல் சூளையில் வேலை பார்த்தார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது கள்ளக்காதலாக மாறியது.
இரவில் செங்கல் சூளையில், இருவரும் தங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கல் சூளையில் முத்துசாமிக்கும், காளீசுவரிக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது காளீசுவரியை சரமாரியாக தாக்கி உள்ளார்.
இவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போதும், அவரை இழுத்து சென்று தாக்கியதில் காளீசுவரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து முத்துசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கைது
இந்த நிலையில் நேற்று வேலைக்கு வந்த செங்கல் சூளை தொழிலாளர்கள் காளீசு்வரி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அறிந்த சேத்தூர் புறநகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காளீசுவரி உடலை பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த துணை சூப்பிரண்டு பிரீத்தி இந்த கொலை குறித்து தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் தப்பி ஓடிய முத்துசாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.