2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
கறம்பக்குடி:
ஆசிரியர்களுக்கு பயிற்சி
கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 5 நாள் பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சியின் இரண்டாம் நாள் நிகழ்வில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன் பயிற்சி மையத்தினை பார்வையிட்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்று பொது முடக்கத்தால் மாணவர்கள் கற்றலில் பின்தங்கி உள்ளனர். எனவே 1 முதல் 3-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் எண்ணறிவையும், எழுத்தறிவையும் 2025-ம் கல்வியாண்டிற்குள் பெற்றிருக்க வேண்டும் என்ற தொலைநோக்கில் தமிழக அரசினால் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
2 ஆயிரம் பேர்
இத்திட்டத்தின் குறிக்கோள் நிறைவேற புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 இடங்களில் எண்ணும் எழுத்தும் 5 நாட்கள் பயிற்சி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் சுமார் 2 ஆயிரம்பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது பயிற்சியின் மைய ஒருங்கிணைப்பாளர் தனசேகரன், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் செல்வராஜ், கறம்பக்குடி வட்டார கல்வி அலுவலர்கள் துரையரசன், துரைராசு மற்றும் வட்டாரவள மைய மேற்பார்வையாளர் ராஜலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
விராலிமலை
விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன விரிவுரையாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிவலிங்கம் மற்றும் வட்டார கல்வி அலுவலர் உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், ஆகிய பாடங்களிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும் அறிவையும் உணர்வையும் கொடுக்கும் வகையில் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும்.
ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்லும் பொழுது கற்றல், கற்பித்தல் துணைக்கருவிகளுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இப்பயிற்சியில் ஒன்று, இரண்டு மற்றும் முன்றாம் வகுப்பு இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சியளித்தனர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் கலந்து கொண்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். முன்னதாக வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் வரவேற்றார்.
அன்னவாசல்
அன்னவாசல் அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது. பயிற்சினை வட்டார கல்வி அலுவலர் கலா தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரோஸ்மேரி சகாயராணி, மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சியாமளா மற்றும் கருத்தாளர்கள் கலந்துகொண்டு அன்னவாசல் வட்டாரம் முழுவதும் பணியாற்றும் 1,2,3-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி 5 நாள் நடைபெறுகிறது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர் ஜோசப் ரொசாரியோ மற்றும் ஆசிரியர் டேவிட், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.