மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு
செங்கோட்டை அருகே, மது குடித்ததை கண்டித்த மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே, மது குடித்ததை கண்டித்த மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விவசாயி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கிராமம் கலைஞர் காலனியை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 33), விவசாயி. இவருடைய மனைவி கவுசல்யா (25). வல்லத்தில் முப்பிடாதி அம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது.
நேற்று முன்தினம் சந்தனகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்து விட்டு வீட்டிற்கு சாப்பிட வந்தார். அப்போது மது குடித்ததை கவுசல்யா கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த கவுசல்யா, கணவர் சந்தனகுமாருக்கு சாப்பாடு வைத்து விட்டு தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்டார்.
நாட்டு வெடிகுண்டு வீச்சு
அப்போது மதுபோதையில் இருந்த சந்தனகுமார் ஆத்திரம் அடைந்து, வயலில் பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் அட்டகாசத்தை தடுப்பதற்காக வீட்டில் மறைத்து வைத்து இருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து மனைவி கவுசல்யா மீது வீசினார்.
இதில் வெடிகுண்டு வெடித்து கவுசல்யா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா அலறினார். அவருடைய சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவரை அழைத்து சென்று தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
இதுகுறித்து கவுசல்யா செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் இசக்கி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சந்தனகுமாரை பிடித்து கைது செய்தார்.
பின்னர் அவரை செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.