தம்பதி விஷம் குடித்து தற்கொலை
நெல்லை அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
நெல்லை அருகே மேல செவல் வாணியர்குளம் புது காலனியைச் சேர்ந்தவர் அமிர்தம் (வயது 80). இவருடைய மனைவி அன்னத்தாய் (75). இவர்கள் 2 பேரும் விவசாயம் செய்து வந்தனர். இவர்களுடைய மகள் மிக்கேல் அம்மாள். இவருக்கு திருமணமாகி அதே ஊரில் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அன்னத்தாய்க்கு கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மகள் மிக்கேல் அம்மாள் கவனித்து வந்தார். அன்னத்தாய்க்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.
விஷம் குடித்து...
இதனால் மனமுடைந்த அன்னத்தாய், ''நாம் யாருக்கும் பாரமாக இருக்க வேண்டாம்'' என்று கணவர் அமிர்தமிடம் கூறினார். இதையடுத்து ஒன்றாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர்கள், கடந்த 13-ந்தேதி ஊருக்கு வெளியில் உள்ள வெள்ளநீர் கால்வாய் பகுதிக்கு ெசன்றனர்.
அங்கு அமிர்தமும், அன்னத்தாயும் விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, மிக்கேல் அம்மாளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அடுத்தடுத்து சாவு
உடனே தம்பதியரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அமிர்தமும், அன்னத்தாயும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். நெல்லை அருகே வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.