ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
x

கரூர் அருகே ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கரூர்

ரெயில்வே தண்டவாளத்தில் பிணம்

கரூர் மாவட்டம், மாயனூர் ெரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு ஆண், பெண் ஆகிய 2 பேர் அடிப்பட்டு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தனர். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கரூர் ெரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களையும் பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்த விவரம் பின்வருமாறு:-

மனைவி-கணவரை பிரிந்த ஜோடி

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

மாயனூர் பகுதியை சேர்ந்தவர் கரட்டான். இவரது மனைவி போதி (35). இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதி தனது வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது ஸ்டவ் வெடித்து அவருக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். ஆனால் தீக்காயம் அடைந்ததால் போதியின் உடல் முழுவதும் தழும்புகள் இருந்துள்ளது. இதனால் போதியுடன், கரட்டான் வாழபிடிக்காமல் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். இதனால் போதி தனிமையில் இருந்து வந்துள்ளார்.

கள்ளக்காதல்

இந்தநிலையில் போதிக்கு ஈரோடு மாவட்டம், அந்தியூரில் சமையல் வேலை கிடைத்துள்ளது. இதனால் போதி அங்கு சென்று சமையல் வேலை செய்து வந்துள்ளார். அப்போது தான் போதிக்கும், பெருமாளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனால் அடிக்கடி 2 பேரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

இதற்கிடையில் போதிக்கு வேலை பிடிக்காமல் சொந்த ஊரான மாயனூருக்கே வந்து விட்டார். இதனால் பெருமாள் நேற்று முன்தினம் அந்தியூரில் இருந்து மாயனூருக்கு போதியை தேடி வந்துள்ளார். இதையடுத்து 2 பேரும் நேற்று முன்தினம் இரவு மாயனூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த வழியாக வந்த மயிலாடுதுறை-மைசூர் அதிவிரைவு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் நேற்று காலை சம்பவ இடத்துக்கு திருச்சி ெரயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் இந்த கள்ளக்காதல் ஜோடி எதற்காக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து கரூர் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story