குழந்தை இறந்ததால் விஷம் குடித்த தம்பதி
குழந்தை இறந்ததால் விஷம் குடித்த தம்பதி
போடிப்பட்டி
உடுமலை அருகே குழந்தை இறந்ததால் மன வேதனையில் இருந்த தம்பதி விஷம் குடித்தனர். இதில் மனைவி உயிரிழந்த நிலையில் கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தம்பதி
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சித்தக்குட்டை பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மகள் வீரசின்னம்மாள் (20). இவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு வருடத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டனர்.
இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவருக்கும், வீரசின்னம்மாளுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்து 2 நாட்களில் அந்த குழந்தை இறந்து விட்டது. இதனால் வீரசின்னம்மாள் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
விஷம் குடித்து தற்கொலை
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீரசின்னம்மாள் வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர் பூபாலனும் களைக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின் உடுமலையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருவரின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வீரசின்னம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
பூபாலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.