கார் மோதி தம்பதி படுகாயம்
மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி படுகாயம் அடைந்தனர்.
கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 37) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (30). இவர்கள் கடந்த சில மாதங்களாக கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு இந்திரா காலனி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று இவர்கள் வெட்டுக்காடு பகுதியில் இருந்து மோட்டார்சைக்கிளில் கம்பத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
கூடலூர் வடக்கு புறவழிச்சாலை அருகே சென்றபோது, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து குமுளி நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து 2 பேரும் படுகாயம் அடைந்தனர். காரின் முன்பகுதி சேதமடைந்தது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிந்து தேவகோட்டையை சேர்ந்த கார் டிரைவரான பிரவீன் குமார் (21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.