கொலை முயற்சி வழக்கில் தம்பதிக்கு 5 ஆண்டு சிறை
கொலை முயற்சி வழக்கில் தம்பதிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் ஆனந்த். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (வயது 43) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வக்குமார், அவருடைய மனைவி பத்மா (40) ஆகியோர் சேர்ந்து ஆனந்த், அவரது பெற்றோர் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசார், சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட செல்வக்குமார், பத்மா ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீ்ர்ப்பு கூறினார்.