வீட்டில் தீக்காயத்துடன் கிடந்த தம்பதி; மனைவி சாவு
ஆவுடையார்கோவில் அருகே வீட்டில் தீக்காயத்துடன் கிடந்த தம்பதியில் மனைவி இறந்தார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆவுடையார்கோவில்:
தகராறு
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் குறிச்சிக்குளம் முத்துமாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் மாணிக்கம் மகன் ராமு (வயது 35). இவரது மனைவி வடிவுக்கரசி (28). இவர்களுக்கு மகாலட்சுமி (10) என்ற மகளும், அய்யப்பன் (8) என்ற மகனும் உள்ளனர். நெல்லியடியில் உள்ள தொடக்கப்பள்ளியில் மகாலட்சுமி 5-ம் வகுப்பும், அய்யப்பன் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். ராமு ஆவுடையார்கோவில் ஆத்மநாதசாமி கோவிலுக்கு எதிரே பூக்கடை நடத்தி வருகிறார். இன்று அய்யப்பனுக்கு பிறந்தநாள் ஆகும்.
இந்நிலையில், காலை வடிவுக்கரசி தனது 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது குழந்தைகளை பூக்கடைக்கு அழைத்து வந்தார். அப்போது ராமு மது அருந்தி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வடிவுக்கரசி வீட்டிற்கு வந்துள்ளார்.
மனைவி சாவு; கணவருக்கு தீவிர சிகிச்சை
இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த ராமுவின் தாய் லட்சுமி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் ராமு-வடிவுக்கரசி இருவரும் மண்எண்ணெயை உடலில் ஊற்றப்பட்டு தீக்குளித்து உடல் எரிந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதைப்பார்த்து லட்சுமி கதறி அழுதார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவுக்கரசி பரிதாபமாக இறந்தார். மேல்சிகிச்சைக்காக ராமு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி தீக்குளித்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் தீக்குளித்ததில் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.