தொழில் போட்டியில் தம்பதி கொலையா? -6 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை


உப்பிலியபுரம் அருகே தொழில் போட்டியில் தம்பதி கொலை செய்யப்பட்டனரா? என 6 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி

உப்பிலியபுரம் அருகே தொழில் போட்டியில் தம்பதி கொலை செய்யப்பட்டனரா? என 6 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெட்டிக்கொலை

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த பி.மேட்டூர் ஆசாரித்தெருவை சேர்ந்த தங்கவேல். கூலி தொழிலாளி. இவரது மகன் ராஜ்குமார் (வயது 29). பிளஸ்-2 வரை படித்த இவர் விவசாயம் செய்து வந்தார்.

பக்கத்து கிராமமான சோபனாபுரத்தை சேர்ந்தவர் சாரதா (20).எஸ்.எஸ்.எல்.சி. படித்துள்ளார். ராஜ்குமார் சோபனாபுரத்திற்கு அடிக்கடி செல்வார். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

பெற்றோர் சம்மதத்துடன்...

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ராஜ்குமார் நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவராக பணியாற்றி வந்தார். மேலும் வைக்கோல் சுற்றும் எந்திரமும் வைத்துள்ளார். தம்பதி இருவரும் இந்த எந்திரத்தை பக்கத்து ஊர்களுக்கு கொண்டு சென்று வைக்கோல் சுற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அதுமட்டுமின்றி சோபனாபுரத்தை சேர்ந்த விஜயசேகரன் என்பவரது 4 ஏக்கர் தோட்டத்தை வருடாந்திர குத்தகைக்கு எடுத்து தம்பதி இருவரும் விவசாயம் செய்து வந்தனர். மேலும் அந்த தோட்டத்தில் ஒரு வீடு உள்ளது. தோட்டத்தில் அதிக வேலை இருக்கும் சமயங்களில் அந்த தம்பதியினர் அந்த வீட்டில் தங்குவது வழக்கம். மற்ற நேரங்களில் ராஜ்குமார் வீட்டில் தங்குவதுண்டு.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவில் தோட்டத்து வீட்டில் தங்கியிருந்த தம்பதியை மர்ம ஆசாமிகள் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த கொலை சம்பவம் நேற்று முன்தினம் காலைதான் போலீசாருக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.ஜி.விசாரணை

இந்த நிலையில் நேற்று மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன், டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மற்றும் போலீசார் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அவர்கள் கொலை பற்றிய விவரங்களை கேட்டறிந்தனர். அப்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குற்றாலிங்கம், முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஷ்மின், இன்ஸ்பெக்டர்கள் துறையூர் செந்தில்குமார், தொட்டியம் முத்தையன், முசிறி சுப்புலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க ஐ.ஜி.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஷ்மின் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொழில் போட்டியில் கொலையா?

கொலை செய்யப்பட்ட ராஜ்குமார் நெல் அறுவடை எந்திரம் ஓட்டி வந்துள்ளார். இவர் பக்கத்து கிராமங்களில் நெல் அறுவடை எந்திரம் வைத்திருக்கும் நபர்களிடம் அவ்வப்போது, டிரைவர் வேலைக்கு செல்வது வழக்கம். அதுமட்டுமின்றி வைக்கோல் சுற்றும் வேலைக்கும் செல்வாராம். இந்த நிலையில் திருமணம் ஆன பிறகு ராஜ்குமார் சொந்தமாக வைக்கோல் சுற்றும் எந்திரம் வாங்கி மனைவியுடன் சேர்ந்து வைக்கோல் சுற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் அவர் நெல் அறுவடை எந்திரம் ஓட்டும் போது, பக்கத்து கிராமங்களில் ஏராளமான விவசாயிகளின் பழக்கம் கிடைத்துள்ளது. அந்த பழக்கத்தை வைத்து அவர், தான் வாங்கிய வைக்கோல் சுற்றும் எந்திரத்தை கொண்டு பக்கத்து ஊர்களுக்கு சென்று வேலை செய்து வந்துள்ளார். இதன்காரணமாக ராஜ்குமாருக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தொழில் போட்டி காரணமாக கொலை செய்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story