2 பெண்களிடம் நகை பறித்த கள்ளக்காதல் ஜோடி கைது


தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 2 பெண்களிடம் நகை பறித்த கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாலியாக ஊர் சுற்ற திருட்டு தொழிலுக்கு இருவரும் மாறியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

கன்னியாகுமரி

அருமனை:

குமரி மாவட்டத்தில் 2 பெண்களிடம் நகை பறித்த கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாலியாக ஊர் சுற்ற திருட்டு தொழிலுக்கு இருவரும் மாறியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

பெண்ணிடம் நகை பறிப்பு

குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள செம்மங்காலை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா (வயது 58). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த மாதம் 10-ந் தேதி இரவு கிறிஸ்டினா கடைக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வந்தனர். கணவன், மனைவி போல் வந்த அவர்கள் கடையில் இருந்த கிறிஸ்டினாவிடம் பழம் வேண்டும் என கேட்டுள்ளனர். அந்த சமயத்தில் மின்சார தடை இருந்ததால் இருட்டாக இருந்தது. இந்தநிலையில் கிறிஸ்டினா கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் நகையை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் தப்பி விட்டனர்.

மற்றொரு சம்பவம்

அவ்வாறு அவர்கள் தப்ப முயன்ற போது பெண்ணின் செருப்பு கீழே விழுந்தது. இதனை தொடர்ந்து அருமனை போலீசார் அந்த செருப்பை கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே சமீபத்தில் தக்கலை அருகே ஒரு பெண்ணிடம் நகை பறிப்பு நடந்தது. இந்த சம்பவத்திலும் ஒரு பெண்ணும், ஒரு ஆணும் சேர்ந்து கைவரிசை காட்டினர்.

இதனால் கிறிஸ்டினாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களே, இந்த பெண்ணிடமும் நகையை பறித்திருக்கலாம் என போலீசார் கருதினர். குமரியை கலக்கும் இந்த ஜோடி யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

கள்ளக்காதல் ஜோடி சிக்கியது

இந்தநிலையில் தமிழக-கேரள எல்லை பகுதியான பனச்சமூடு பகுதியில் நேற்றுமுன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆண், பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். உடனே போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது குமரியில் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட ஆண், பெண் என்பதும், இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பதும் அம்பலமானது. மேலும் இதுபற்றி பரபரப்பு தகவல்கள் வெளியானது.

பரபரப்பு தகவல்

அதாவது கேரள மாநிலம் பள்ளிச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (34). இவருக்கு திருமணமாகி குழந்தைகளுடன் வசித்தார். வெள்ளறடை ஆனப்பாறை பகுதியைச் சேர்ந்த ராஜூ மனைவி சாந்தகுமாரி (40). இவர் கணவரை விட்டு பிரிந்து மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.

சதீஷ் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்தார். அப்போது ஓட்டலுக்கு அருகில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் சாந்தகுமாரி பணிபுரிந்தார்.

அந்த சமயத்தில் இருவரும் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டு இருவரும் மனம் விட்டு பேச தொடங்கினர். இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது.

கள்ளக்காதல் மயக்கத்தில் இருவரும் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி ஊர் சுற்ற தொடங்கினர். இந்த பழக்கம் அதே நிலையில் இருக்க பணம் தேவைப்பட்டது. இதனால் பணத்துக்காக திருட்டு தொழிலில் ஈடுபடலாம் என முடிவு செய்தனர். ஜாலியாக ஊர் சுற்றும் போது பெண்களை குறி வைத்து நகை பறிக்க திட்டமிட்டனர்.

கைது

அதன்படி தான் கிறிஸ்டினா மற்றும் தக்கலை பகுதியை சேர்ந்த பெண்ணிடம் நகை பறித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் கிறிஸ்டினாவிடம் பறித்துச்சென்ற நகை மற்றும் மோட்டார் சைக்கிளை சதீஷ், சாந்தகுமாரி ஆகியோரிடம் இருந்து மீட்டனர்.

மேலும் இதுதொடர்பாக 2 பேரையும் போலீசார் கைது செய்து நேற்று குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் ஜோடி கைவரிசை காட்டியது இந்த 2 பெண்களிடம் மட்டும் தானா? அல்லது வேறு யாரிடமும் நகை பறித்திருக்கிறார்களா? என்பதை அறிய அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story