கோவில்பட்டியில் தம்பதி கழுத்தை அறுத்துக் கொலை


தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 4:56 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் தம்பதி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இந்த படுகொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

ேகாவில்பட்டியில் தம்பதி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தம்பதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 41) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பரணிசெல்வி (39). இவர் லாயல்மில் காலனியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர்களுக்கு மனோஜ் (18) என்ற மகனும், உமா (14) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் பெருமாள் நகரில் புதியதாக வீடு கட்டி குடியேறியுள்ளனர். வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கதவு திறக்கவில்லை

இந்த நிலையில் நேற்று மாலையில் மனோஜ் பெட்டி கடைக்கும், உமா வெளியேயும் சென்று விட்டனர். இதனால் கணவன்-மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர்.

பின்னர் கடையில் இருந்து மனோஜ் வீட்டிற்கு வந்தார். கதவை தட்டிய போது திறக்கவில்லை. உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மனோஜ் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்.

பிணமாக கிடந்தனர்

இதையடுத்து அவர்கள் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் உள்ளே ராஜபாண்டி, பரணிசெல்வி ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை

மேலும் சம்பவ இடத்தை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, கணவன்-மனைவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததால் அவர்களை யாரேனும் மர்ம நபர்கள் கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கடன் பிரச்சினை காரணமாக ராஜபாண்டி தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் ெதரியவந்தது.

பரபரப்பு

கோவில்பட்டியில் தம்பதி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story