கூரியர் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
நாகர்கோவிலில் உள்ள கூரியர் நிறுவனத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பார்சல்கள் எரிந்து நாசமானது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள கூரியர் நிறுவனத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பார்சல்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்து
நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் இருந்து பீச்ரோடு செல்லும் சாலையில் ஒரு தனியார் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் நேற்று காலை பூட்டப்பட்டு இருந்தது. இந்தநிலையில் காலை 8.30 மணிக்கு நிறுவன ஷட்டரின் அடிப்பகுதியில் இருந்து புகைமண்டலம் வெளியேறியது.
இதுபற்றி தகவல் அறிந்த கூரியர் நிறுவன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஷட்டரை திறந்து பார்த்த போது வெளியூர்களுக்கு அனுப்புவதற்காகவும், வெளியூர்களில் இருந்து நாகர்கோவிலில் பட்டுவாடா செய்வதற்காகவும் வந்திருந்த பார்சல்களில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனே அவற்றை அணைக்க ஊழியர்கள் முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மின்கசிவு காரணமா?
உடனே குமரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி தென்னரசு தலைமையில் உதவி மாவட்ட தீயணைப்பு அதிகாரி இம்மானுவேல், நாகர்கோவில் நிலைய தீயணைப்பு அதிகாரி (போக்குவரத்து) பெனட் தம்பி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
இருப்பினும் அங்கிருந்த பார்சல்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகின. இந்த தீ விபத்து சம்பவத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்திருக்கலாம் எனவும், மின்கசிவு காரணமாக தீ விபத்தில் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.