மனமகிழ் மன்றத்துக்கு மது குடிக்க தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வருகிறார்களா?
குமரி மாவட்டத்தில் செயல்படும் மனமகிழ் மன்றத்துக்கு மது குடிக்க தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வருகிறார்களா? என்பது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
குமரி மாவட்டத்தில் செயல்படும் மனமகிழ் மன்றத்துக்கு மது குடிக்க தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வருகிறார்களா? என்பது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுபான பாருடன் கிளப்
கன்னியாகுமரி மாவட்டம் கீழ்குளம் பேரூராட்சியை சேர்ந்த கிருஷ்ணன், விஸ்வநாதன், ஆஷா, லாசர், ஷீபா, கவிதா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கீழ்குளம் பேரூராட்சியில் 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ளவர்களில் 91 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள். கீழ்குளம் சந்திப்பில் 15 ஆண்டுகளுக்கு முன்பு மதுக்கடை செயல்பட்டு வந்தது. 2007-ம் ஆண்டில் இந்த பகுதியில் சாதி, மத மோதல்கள் ஏற்பட்டன.
இதையடுத்து இந்த பகுதியில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது. அதன்பின்பு பொதுமக்களின் நலன் கருதி இங்கிருந்த மதுக்கடை மூடப்பட்டது. மேலும் கீழ்குளம் பேரூராட்சியில் மது விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் மதுபான பாருடன் இணைந்த கிளப் (மனமகிழ்மன்றம்) செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இந்த பகுதியில் வணிக வளாகத்தில் ஹார்டுவேர் கடைக்கான குடோன் அமைக்க அனுமதி பெற்றுவிட்டு, கிளப் நடத்தப்படுகிறது. விதிகளை மீறி மதுபான பாருடன் கூடிய கிளப் செயல்பட அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இந்த கிளப் அருகில் பள்ளி, கிறிஸ்தவ ஆலயம், கோவில் ஆகியவையும் உள்ளன. இதனால் எங்கள் பகுதியில் குடியிருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
தடை விதிக்க மனு
மதுபான பாருடன் கூடிய கிளப்புகள் டாஸ்மாக் கடைகளின் கிளை போலத்தான் செயல்படுகின்றன. கீழ்குளம் பேரூராட்சியில் உள்ள கிளப்பில் மொத்தம் 232 உறுப்பினர்களில் 195 பேர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 37 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் கூட கீழ்குளத்தை சேர்ந்தவர்களே இல்லை.
இங்கு டாஸ்மாக் கடையை போல செயல்பட்டு, ஒரு மாதத்திற்கு 2 ஆயிரம் யூனிட் மது விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து கிளப்புகளும் மதுபான பாருடன் இணைந்து நடத்தப்படுவதில், அதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. எனவே மதுபான பாருடன் இணைந்த கிளப் செயல்பட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
தமிழக அரசுக்கு உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது. குமரி மாவட்டத்தில் செயல்படும் கிளப்பில் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மது குடிக்க உறுப்பினரானது எப்படி? என்பது உள்ளிட்ட மேற்கண்ட மனுதாரர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.