ஐ.டி.ஐ. பயிற்றுநர்களை நியமிக்க தடை
ஐ.டி.ஐ. பயிற்றுநர்களை நியமிக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
தேனியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், அரசு ஐ.டி.ஐ.க்களில் கணினி பயிற்றுநர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். பலரது ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்படவில்லை. இந்தநிலையில், ஐ.டி.ஐ. பயிற்றுநர் பணியிடத்தை தனியார் ஏஜென்சி மூலம் அவுட் சோர்சிங் முறையில் நியமிப்பது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை செயலாளர் தரப்பில் கடந்த அக்டோபர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது. இதனால், நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் எங்களை போன்ற பலர் பாதிக்கப்படுவார்கள். எனவே, பயிற்றுநர் பணியிடத்தை அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். எங்களை தொகுப்பூதியத்தில் நியமிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தும், அரசு தரப்பில் பதில் அளிக்கும்படியும் உத்தரவிட்டு, விசாரணையை 8 வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.