தலைவன் உள்பட 2 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி
ஏ.டி.எம். கொள்ைள சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் உள்பட 2 பேரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.
ஏ.டி.எம். கொள்ைள சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் உள்பட 2 பேரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.
ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் அரியானா மாநிலத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு மேவாட் பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பல் தலைவன் அரியானா மாநிலம் நூ மாவட்டம் சோனாரி கிராமத்தை சேர்ந்த முகமது ஆரிப் (வயது 35) மற்றும் அரியானா மாநிலம் புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தை சேர்ந்த ஆசாத் (37) ஆகிய 2 பேரை அந்த மாநில போலீசார் உதவியுடன் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
கோர்ட்டில் மனு
பின்னர் அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் கடந்த 18-ந் தேதி திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசார் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய 2 பேரை பலத்த காவலுடன் போலீசார் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர்.
7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி
பின்னர் அவர்கள் இருவரையும் திருவண்ணாமலை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கவியரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க அனுமதி கேட்டனர்.
இதையடுத்து இருவரையும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் அவர்கள் கொள்ளையடித்த ரூ.70 லட்சத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளார்கள் என்ற விவரம் தெரிய வரும் என கூறப்படுகிறது.