வக்கீலை தாக்கியவரை கைது செய்யக்கோரி கோர்ட்டு புறக்கணிப்பு
ஆலங்குடியில் வக்கீலை தாக்கியவரை கைது செய்யக்கோரி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
சொத்து தகராறு
ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கூனாரிசங்கரன் குடியிருப்பை சேர்ந்தவர் வளர்மதி (வயது 63). இவர் ஆலங்குடி நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. வளர்மதிக்கும் அவரது தம்பிகளுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பலா மரங்களை வெட்டுவது தொடர்பாக வளர்மதிக்கும் அவரது தம்பி பாண்டியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையறிந்த வளர்மதி மகன் கேட்டபோது அவரை பாண்டியன் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிகேட்க வளர்மதி சென்றபோது அவரையும் உருட்டுக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
கோர்ட்டு புறக்கணிப்பு
இதையடுத்து அவர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் வளர்மதி தரப்பினர் தாக்கியதாக கூறி பாண்டியன் அறந்தாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் வக்கீலை தாக்கியவரை கைது செய்யக்கோரி ஆலங்குடி வக்கீல் சங்கத்தினர் நேற்று ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தலைவர் எஸ்.பி.ராஜா தலைமை தாங்கினார். வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டதால் வழக்கு சம்பந்தமாக வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.