சமரசமாக தீர்வுகாணும் வழக்குகளுக்கு, கோர்ட்டு கட்டணம் திருப்பி வழங்கப்படும்


சமரசமாக தீர்வுகாணும் வழக்குகளுக்கு, கோர்ட்டு கட்டணம் திருப்பி வழங்கப்படும்
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சமரசமாக தீர்வுகாணும் வழக்குகளுக்கு, கோர்ட்டு கட்டணம் திருப்பி வழங்கப்படும். இதில் மேல்முறையீடு கிடையாது என்று தஞ்சையில் நடந்த சமரச தின தொடக்க விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி கூறினார்.

தஞ்சாவூர்

சமரசமாக தீர்வுகாணும் வழக்குகளுக்கு, கோர்ட்டு கட்டணம் திருப்பி வழங்கப்படும். இதில் மேல்முறையீடு கிடையாது என்று தஞ்சையில் நடந்த சமரச தின தொடக்க விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி கூறினார்.

சமரச நாள் விழா

சென்னை ஐகோர்ட்டு உத்தரவிற்கிணங்க சமரச நாள் விழா வருகிற 13-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று தஞ்சை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தங்கமணி வரவேற்றார்.

விழாவிற்கு தஞ்சை மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தாமார்ட்டின் தலைமை தாங்கி விழிப்புணர்வு பலகையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

சமரச மையம், சென்னை ஐகோர்ட்டால் ஏற்படுத்தப்பட்டு அனைத்து மாவட்ட கோர்ட்டுகளிலும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வழக்கிலும், விசாரணை நடைபெறுவதற்கு முன்னர், வழக்கு தரப்பினர்கள் தங்களுடைய முரண்பாடுகளை நேரடியாக பயிற்சி பெற்ற சமரசர்கள் முன்னிலையில் பேசி சுமூகமான தீர்வுகாணலாம். கோர்ட்டு வழங்கும் இந்த சேவைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை.

மேல்முறையீடு இல்லை

சமரசமாக தீர்வுகாணும் வழக்குகளில் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகின்றன. சமரசமாக பேசி முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு இல்லை. சமரச முடிவுகளில் காத்திருப்பு நேரங்களும், பொருட்செலவுகளும் மீதப்படுகின்றன. இவற்றின் பயன்பாடுகள் நமது குடும்பத்திற்காகவும். செயல்பாட்டிற்காகவும் அமைகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தஞ்சை மாவட்ட சமரச மையத்தின் தலைவர் இந்திராணி, வக்கீல் ராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் தஞ்சை போக்சோ கோர்ட்டு நீதிபதி சுந்தர்ராஜன், மற்றும் நீதிபதிகள், வக்கீல் சங்க தலைவர் அமர்சிங், முன்னாள் வக்கீல் சங்கதலைவர் ஜீவக்குமார் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

மேலும் சமரச நாளையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) தஞ்சையை அடுத்த சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சட்ட மாணவர்களுக்கு பயிற்சி பெற்ற சமரசர்களால் சமரச விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. நாளை (புதன்கிழமை) சமரச விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெறுகிறது. வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) சமரச விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.


Next Story