ஊழல் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


ஊழல் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

தேவைப்பட்டால் ஊழல் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை தற்காலிகமாக முடக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு அறுவுறுத்தியுள்ளது.

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் சிவந்தங்கலைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.11.50 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் சதுர அடி நிலத்தை ரூ.10 லட்சத்திற்கு வாங்கியதாக இவர் மீது காஞ்சுபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2010-ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், காஞ்சிபுரம் கோர்ட்டில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கி விட்டதால், தற்போது இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று தெரிவித்தார்.

அதே சமயம் இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் கோர்ட்டுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் சமர்ப்பித்த சொத்து விவரங்களை ஆய்வு செய்து, அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துக்களை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி. மற்றும் தலைமைச் செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அரசு துறைகளில் நிலவும் ஊழல் குறித்து பொதுமக்கள் புகாரளிக்க ஏதுவாக தனி தொலைபேசி எண்கள், வாட்ஸ் ஆப் எண்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். ஊழல் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை அனைத்து ஊழல் வழக்குகளிலும் பின்பற்ற வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தற்காலிகமாக சொத்துக்களை முடக்கம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஊழலை கட்டுப்படுத்துவதற்கு தற்போது இருக்கும் சட்டங்கள் போதுமானவை அல்ல என்பதையும், அரசு துறைகளில் பெருகி வரும் ஊழலையும் கருத்தில் கொண்டு, ஊழல் அரசு ஊழியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக 1999-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, 24 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சட்ட மசோதாவை நிறைவேற்றுவது குறித்து நாடாளுமன்றம் சிந்திக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார்.



Next Story