கவரிங் நகை வியாபாரி மகள் காரில் கடத்தல்


கவரிங் நகை வியாபாரி மகள் காரில் கடத்தல்
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ஒருதலைக்காதல் விவகாரத்தில் கவரிங் நகை வியாபாரி மகளை காரில் கடத்திய என்ஜினீயர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்:

சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மகன் திருமாவளவன் (வயது 24). என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடலூர் முதுநகரை சேர்ந்த கவரிங் நகை வியாபாரியின் 17 வயதுடைய மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருமாவளவன், தனது நண்பர்களான சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ரங்கராஜ்(24), கடலூர் கோதண்டராமபுரத்தை சேர்ந்த அப்பர்சுந்தரம் மகன் அஜய் (22), செல்லாங்குப்பத்தை சேர்ந்த கண்ணாலன் மகன் சந்தோஷ் (24) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு கடலூர் முதுநகருக்கு வந்தார்.

காரில் கடத்தல்

அப்போது சாலையில் நடந்து வந்த 17 வயது சிறுமியை திருமாவளவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்திச் சென்றார். இதை அந்த தெரு மக்கள் பார்த்து, சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் பதறிப்போன பெற்றோர், இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியையும், கடத்தல் காரர்களையும் தேடி வந்தனர். மேலும் புதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே 4 பேரும் சிறுமியை கடத்திக்கொண்டு கடலூர் எஸ்.பி. அலுவலக சாலையில் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று குறிப்பிட்ட அந்த காரை மடக்கி அதில் இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் திருமாவளவன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story