அந்தரநாச்சி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாடு, குதிரை வண்டி பந்தயம்
அந்தரநாச்சி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதையடுத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்
அரிமளம் ஒன்றியம் மேல்நிலைப்பட்டி அந்தரநாச்சி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் மேல்நிலைப்பட்டி அரிமளம் சாலையில் நடைபெற்றது. இதில் பெரிய மாடு, சிறிய மாடு, குதிரை என 3 பிரிவாக போட்டி நடைபெற்றது. பெரிய மாடு போக வர 7 மைல் தூரமும், சிறிய மாடு போக வர 5 மைல் தூரமும், குதிரை போக வர 7 மைல் தூரமும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பெரிய மாடு பிரிவில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில், வெற்றி இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அம்பாள் கணபதி முதலிடமும், 2-வது பரிசை தஞ்சாவூர் மாவட்டம் அம்மன் பேட்டை சகாயராணியும், 3-வது பரிசை புனவாசல் நித்திய வேம்பையனும், 4-வது பரிசை ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளையபுரம் அஜ்மல்கான் ஆகியோர் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
சிறிய மாடு பிரிவில் 11 மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை சிவகங்கை மாவட்டம் ஏரியூர் விஜயவேலும், 2-வது பரிசை புதுக்கோட்டை மாவட்டம் பிடாரிக்காடு மாரியம்மனும், 3-வது பரிசை சிவகங்கை மாவட்டம் முள்ளங்காடு செல்லக்கண்ணும், 4-வது பரிசை தஞ்சாவூர் மாவட்டம் பொன்காடு மாசிலாமணியும் பெற்றனர்.
குதிரை பந்தயத்தில் 16 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை நாகூர் பிரவீனும், 2-வது பரிசை கார்குடி குணாவும், 3-வது பரிசை காட்டுபுளி சவுந்தரும், 4-வது பரிசை திருச்சி மாரிஸ் ராஜாவும் பெற்றனர். இதையடுத்து, வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் வேட்டி, துண்டு, குத்துவிளக்கு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.