புலி தாக்கி பசுமாடு பலி
ஊட்டி எச்.பி.எப். பகுதியில் புலி தாக்கியதில் பசுமாடு இறந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். புலி வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஊட்டி,
ஊட்டி எச்.பி.எப். பகுதியில் புலி தாக்கியதில் பசுமாடு இறந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். புலி வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
புலி நடமாட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சமீபகாலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
இந்தநிலையில் நேற்று ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எச்.பி.எப். பகுதியில் புலி ஒன்று உறுமியவாறு நடமாடி கொண்டிருந்தது. இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த அப்பகுதி மக்கள் புலியை பார்த்து அச்சம் அடைந்தனர். அப்போது பசுமாட்டை வேட்டையாடிய புலி பசியை தீர்த்து விட்டு, அதன் உடல் அருகே சுற்றித்திரிந்தது. இதனை தொலைவில் நின்றவாறு பொதுமக்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர்.
வீடியோ வைரல்
மேலும் சிலர் புலியை பார்த்து ஓட்டம் பிடித்தனர். புலி நடமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே நடமாட அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- எச்.பி.எப். பகுதியில் கடந்த 4 மாதங்களாக புலி நடமாடி வருகிறது. கடந்த ஜூலை 28-ந் தேதி எருமை ஒன்றை வனவிலங்கு வேட்டையாடி, மீதமுள்ள உடலை குடியிருப்பை ஒட்டியுள்ள வனப்பகுதியில் விட்டு சென்றது.
தகவல் அறிந்த வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். பின்னர் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு எருமையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது எருமையை புலி தாக்கியது உறுதியானது. இருப்பினும், இதுவரை புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிடிக்க நடவடிக்கை
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், புலி சுற்றித்திரிந்த பகுதியில் மாடு இறந்து கிடந்தது. புலி தாக்கியதால் தான் உயிரிழந்ததா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும். மேலும் புலி நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் புலியை பிடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.