மாடு முட்டி கர்ப்பிணி சாவு
மாடு முட்டி கர்ப்பிணி உயிரிழந்தார்.
சோமரசம்பேட்டை:
ராம்ஜிநகர் அருகே இனாம்குளத்தூரை அடுத்துள்ள பெரிய ஆலம்பட்டி மணிநகரை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 40). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நிர்மலாசெல்வி(32). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நிர்மலாசெல்வி மீண்டும் கர்ப்பமானார்.கடந்த சில நாட்களாக கோவையில் தங்கி சிவக்குமார் வேலை செய்து வந்துள்ளார். தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிர்மலாசெல்வி, கடந்த 11-ந் தேதி காலை வீட்டில் வளர்க்கும் மாடுகளை அருகே உள்ள தோட்டத்திற்கு ஓட்டிச்சென்று மேய்ச்சலுக்காக விட்டுள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பசுமாடு நிர்மலாசெல்வியின் வயிற்றில் முட்டியது. இதையடுத்து அவருக்கு குடும்பத்தினர் வீட்டில் வைத்து வைத்தியம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் சில நாட்களில் அவருக்கு மீண்டும் வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் நிர்மலாசெல்வியை அவரது குடும்பத்தினர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் இனாம்குளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.