தர்மபுரியில்விவசாயிகளுக்கு கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்
தர்மபுரியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி லாபகரமான கறவை மாடு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குனர் அப்பாராவ் தலைமை தாங்கி விவசாயிகளின் மேம்பாட்டுக்காக பல்கலைக்கழகம் செயல்படுத்தி வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வர உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் பேசினார். மைய பேராசிரியர்கள் கண்ணதாசன், விஜயகுமார் ஆகியோர் பயிற்சி முகாமின் நோக்கம் குறித்து பேசினர். நாட்டு மாடுகள் மற்றும் கலப்பின கறவை மாடுகள் வளர்ப்பில் லாபத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள், வளர் சிதை மாற்ற நோய் மேலாண்மை, நச்சு நோய் மேலாண்மை, ஆரோக்கியமான பசுக்கள் வளர்ப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதேபோல் சுகாதாரமான பால் உற்பத்தி, பால் மற்றும் பால் பொருட்களின் மதிப்பு கூட்டுதல், தொழில் முனைவு வாய்ப்புகள், கறவை மாடு வளர்ப்பை மேம்படுத்த பங்களிப்பு நிறுவனங்களின் சேவை ஆகியவை குறித்து விளக்கி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து விவசாயிகளுக்கும் சான்றிதழ் மற்றும் கறவை மாடு வளர்ப்பு குறித்த கையேடு வழங்கப்பட்டது.