காங்கயம் இன மாடுகள் ரூ.24 லட்சத்திற்கு விற்பனை
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் ரூ.24 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
மாட்டுத்தாவணி
நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். சந்தைக்கு காங்கயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.24 லட்சத்துக்கு விற்பனை
சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 92 மாடுகளில், 65 மாடுகள் ரூ.24 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு உணவாக பயன்படும் சோளத்தட்டுகள், புற்கள் பச்சை, பசேல் என்று நன்கு வளர்ந்து உள்ளன. இதனால் விவசாயிகள் பசு மற்றும் கன்றுகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சந்தையில் வழக்கத்தை விட பசுமாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.