கழிஞ்சூரில் மாடு விடும் விழா
கழிஞ்சூரில் மாடு விடும் விழா நடைபெற்றது. இதனை கண்காணிப்பு குழு உறுப்பினர் நேரில் ஆய்வு செய்தார்.
மாடு விடும் விழா
கழிஞ்சூர் திரவுபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு மாடுவிடும் விழா நேற்று நடந்தது. விழாவில் காட்பாடி, லத்தேரி, குடியாத்தம், சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் கொண்டுவரப்பட்டன. நிகழ்ச்சிக்கு வேலூர் உதவி கலெக்டர் கவிதா தலைமை தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
விழாக்குழுவினர், பார்வையாளர்கள் விழாவிற்கான பாதுகாப்பு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். பின்னர் மாடுகள் செல்லும் பாதை, வழிகாட்டு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா?, காளைகளுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?, மாடுகள் துன்புறுத்தப்படுகிறதா? என்று ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினர் மிட்டல் நேரில் ஆய்வு செய்தார்.
135 மாடுகள்
பின்னர் வாடிவாசல் வழியாக கால்நடைத்துறையினர் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 135 மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டது. அந்த காளைகள் சீறிப்பாய்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைந்தது. அப்போது, வீதியின் இருபுறமும் திரண்டிருந்த இளைஞர்கள் மாடுகளை உற்சாகப்படுத்தினர். விழாவில் காளைகள் முட்டி 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்ட முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
குறிப்பிட்ட இலக்கினை குறைந்த நேரத்தில் கடந்த மாடுகளுகளுக்கு, அதன் உரிமையாளர்களிடம் பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசு ரூ.1 லட்சம், 2-வது பரிசு ரூ.80 ஆயிரம், 3-வது பரிசு ரூ.60 ஆயிரம் என மொத்தம் 47 பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காட்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.