சினை பசுமாடுகளை பாட்டிலால் குத்திய வாலிபர்
திருக்கடையூர் அருகே சினை பசுமாடுகளை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
திருக்கடையூர்;
செம்பனார்கோவில் அருகே விளநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது வீட்டில் 2 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், அப்பகுதி இளைஞர்கள் இடையே முன்விரோதம் காரணமாக சமீபத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், ஒருதரப்பைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், சீனிவாசன் குடும்பத்தினரிடம் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் சீனிவாசன் தனது 2 சினைப்பசுக்களை மேய்ச்சலுக்காக அந்த பகுதியில் கட்டி வைத்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் சென்ற அந்த வாலிபர், தனது கையில் வைத்திருந்த மதுபாட்டிலால் ஒரு பசுவின் கொம்பில் தாக்கியதாக தெரிகிறது. இதில், அப்பசுவின் கொம்பு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. அப்போதும், ஆத்திரம் அடங்காத அந்த வாலிபர், உடைந்த மதுபாட்டிலைக் கொண்டு 2 பசுக்களின் உடலில் பல்வேறு இடங்களில் கிழித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. பசுவின் அலறல் சத்தம் கேட்டு சீனிவாசன் குடும்பத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், செம்பனார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.