தோல் கழலை நோயை தடுக்க மாடுகளுக்கு தடுப்பூசி முகாம்-கலெக்டர் சாந்தி தகவல்


தோல் கழலை நோயை தடுக்க மாடுகளுக்கு தடுப்பூசி முகாம்-கலெக்டர் சாந்தி தகவல்
x

தர்மபுரி மாவட்டத்தில் மாடுகளுக்கு தோல் கழலை நோய் பாதிப்பை தடுக்க தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தோல் கழலை நோய்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாடுகளுக்கு தோல் கழலை நோயின் தாக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதற்காக 3 லட்சத்து 86 ஆயிரத்து 500 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்கள் மூலமாகவும், கால்நடை மருந்தகங்கள் மூலமாகவும் இதுவரை 1 லட்சத்து 63 ஆயிரத்து 600 டோஸ்கள் தடுப்பூசி மாடுகளுக்கு போடப்பட்டுள்ளது. மீதமுள்ள மாடுகளுக்கு தடுப்பூசியை விரைந்து செலுத்தும் விதமாக ஆங்காங்கே முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாடுகள் பாதுகாப்பு

எனவே தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை தங்கள் மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தாத கால்நடை வளர்க்கும் விவசாயிகள் அருகே உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி டாக்டரை அணுகி தங்கள் மாடுகளுக்கு தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். அதன் மூலம் இந்த நோயில் இருந்து மாடுகளை பாதுகாக்கலாம்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனரை 9445001113 என்ற செல்போன் எண்ணிலும், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனரை 9443202009 என்ற செல்போன் எண்ணிலும் அணுகி பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story