போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகள்


போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகள்
x

முத்துப்பேட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இந்தநிலையில் வாலிபர் ஒருவரை மாடு முட்டி தூக்கி வீசியது.

திருவாரூர்

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இந்தநிலையில் வாலிபர் ஒருவரை மாடு முட்டி தூக்கி வீசியது.

போக்குவரத்துக்கு இடையூறு

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆடுகள் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. பகல், இரவு என எந்நேரமும் நகர்பகுதி கடைவீதிகளில் சாவகாசமாக உலா வரும் கால்நடைகள் அங்கு தேங்கிக்கிடக்கும் காய்கறி பழக்கழிவுகள், ஓட்டல்கள், மளிகை கடைகளிலிருந்து வீசியெறியப்படும் கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று வருகின்றன.மாடுகள் போக்குவரத்து பாதையில் போக்குவரத்துக்கு இடையூறாக படுத்து வாகன விபத்துகளுக்கு காரணமாகி வருகின்றன. பகலில் கடைதெருவில் வலம் வரும் மாடுகள் வியாபாரிகளுக்கு மிகுந்த இடையூறு அளிக்கிறது. சில மாடுகள் மக்களை முட்டித்தள்ளி காயப்படுத்துகிறது.இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று சில மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி சார்பில் மாடுகளை பிடித்து மாடு் வளர்ப்போரிடம் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்டது. அப்போது அபராதம் செலுத்திய உரிமையாளர்கள் மாடுகளை திரும்ப பெற்று அடுத்த நிமிடமே சாலையில் விட்டு சென்றனர். .

வாலிபரை முட்டி தள்ளியது

இந்தநிலையில் முத்துப்பேட்டை யூனியன் ஆபிஸ் செல்லும் சாலை பிரியும் திருத்துறைப்பூண்டி சாலையில் வாலிபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் வாழைப்பழ தாரை வாங்கி தான் வந்த ஸ்கூட்டி பைக் முன்பு வைத்தார்.அப்போது அவ்வழியே வந்த பசு மாடு ஒன்று ஸ்கூட்டியில் வைத்திருந்த வாழைப்பழ தாரை இழுக்க முயன்றபோது அந்த வாலிபர் மாட்டை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாடு கண் இமைக்கும் நேரத்தில் தனது கொம்பால் அந்த வாலிபரின் இடுப்பில் முட்டி தூக்கி வீசியது.

அபராதம் விதிக்க வேண்டும்

பின்னர் தூக்கிவீசப்பட்ட இளைஞரை மீண்டும் மாடு முட்ட முயன்றபோது அப்பகுதியில் கடையில் வேலை பார்த்த ஒரு இளம்பெண் துணிச்சலாக கம்பை எடுத்து மாட்டை விரட்டினார். அதனால் அந்த மாடு அங்கிருந்து சென்றது. அந்த பெண் மாட்டை விரட்டவில்லை என்றால் மீண்டும் வாலிபரின் வயிற்றில் மாடு குத்தி பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கும்.இதனால் அதிஷ்டவசமாக பெரிய காயங்கள் ஏதும் இல்லாமல் சிறு காயங்களுடன் அந்த வாலிபர் உயிர் தப்பினர்.இந்த காட்சி அருகில் இருந்த ஒரு மளிகை கடை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. எனவே முத்துப்பேட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story