58 கிராம கால்வாய் திட்ட தொட்டிப்பாலத்தில் விரிசல்:பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டம்
உசிலம்பட்டி அருகே 58 கிராம கால்வாய் திட்ட தொட்டிப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே 58 கிராம கால்வாய் திட்ட தொட்டிப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்தின் தொட்டிப்பாலம் ஆசிய கண்டத்தின் 2-வது நீர் செல்லும் நீளமான தொட்டிப்பாலம் என பெயர் பெற்றது. இந்த தொட்டிப்பாலம் அருகிலேயே கல்குவாரி அமைக்க அனுமதி அளித்து வெடி வெடிப்பதால் தொட்டிப்பாலத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தொட்டிப்பாலம் அருகே கல்குவாரிக்கு அனுமதி அளித்ததால் தொட்டிப்பாலம் விரிசல் அடைந்து விட்டது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தொட்டிப்பாலத்தின் நிலையை கண்டதும், தொட்டிப்பாலத்தின் அடியிலேயே அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்குவாரிக்கு அனுமதி அளித்த அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் திண்டுக்கல் கலெக்டரை தொடர்பு கொண்டு கல்குவாரியை மூடவில்லை எனில் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவேன் என எச்சரிக்கை செய்து தொடர் போராட்டத்தில் விவசாயிகளுடன் ேசர்ந்து ஈடுபட்டார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கொடி பி.ஆர்.பாண்டியனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கல்குவாரியை தற்காலிகமாக மூட வேண்டும், வெடி வெடித்ததால் தொட்டிப்பாலம் ஆபத்தான நிலையில் உள்ளது. அதை அதிகாரிகள் குழு அமைத்து ஆய்வு செய்து கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
உயர்மட்ட குழு
இந்த கோரிக்கைகளை கலெக்டரிடம் பேசி உடனடியாக நிறைவேற்றுவதாக தெரிவித்த தாசில்தார் கல்குவாரியை தற்காலிகமாக மூடி போலீசாரிடம் ஒப்படைத்தார். அதன்படி 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த போராட்டம் கைவிடப்பட்டது.
இதை தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தொட்டிப்பாலத்தை உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். ஆசிய கண்டத்தின் இரண்டாவது அதிசயமான இதை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும். கல்குவாரிக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.