விற்பனை குறைவதாக வருந்தும் வியாபாரிகள்


விற்பனை குறைவதாக வருந்தும் வியாபாரிகள்
x

விற்பனை குறைவதாக வருந்தும் வியாபாரிகள்

திருப்பூர்

திருப்பூர்

ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு சிறப்பு உண்டு. அதிலும் தீபாவளி என்றவுடன் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நினைவுக்கு வருவது புத்தாடை, பட்டாசு, இனிப்புகள். அதுவும் தீபாவளி மக்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் திருநாளாகும். போனஸ் வாங்கி புதுத்துணி எடுத்து அதை தீபாவளிக்கு உடுத்துவது என்பது குதுகலம் அல்லவா. அதனால்தான் எப்போது வரும் அந்த திருநாள் என அனைவரும் வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார்கள். தீபாவளி அன்று காலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மக்களால் தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் தீபாவளியன்று நாள் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடியது உண்டு. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு தீங்கு உண்டாக்குகிறது என்பதால் பட்டாசு வெடிப்பதற்கு 2 மணி நேரம் மட்டுமே அரசு அனுமதி வழங்கியது. அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் வியாபாரம் குறைகிறது என பட்டாசு வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். பொதுமக்களும் அதிக நேரம் பட்டாசு வெடிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் அதை நம்பி வேலை செய்து வந்த சிவகாசி பொதுமக்கள் வேலை இழந்தனர். வியாபாரிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பட்டாசு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறியதாவது:-

விற்பனை குறைவு

கண்ணன் (பட்டாசு கடை ஊழியர்):-

நான் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பட்டாசு கடையில் 4 வருடங்களாக வேலை பார்க்கிறேன். தீபாவளி பண்டிகைக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடால் பொதுமக்கள் அவசர அவசரமாக பட்டாசு வெடிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. எனவே பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்கினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவர். எங்களுக்கும் வியாபாரம் அதிகரிக்கும்.பட்டாசு வெடிப்பதற்கு அரசு காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை என 2 மணிநேரம் மட்டுமே நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால் மக்கள் மிஞ்சி மிஞ்சி போனால் ½ மணிநேரம் அல்லது 1 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பார்கள். எனவே இதற்கென குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்காமல் தங்களுக்கு வேண்டிய நேரத்தில் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படாமல் பட்டாசு வெடிப்பதற்கு அரசு அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும்.

சமீபகாலமாக பட்டாசு உற்பத்தி செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அட்டை, பேப்பர் ஆகியவற்றின் விலை 2 மடங்கு அதிகரித்ததால் கொள்முதல் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதனை ஈடுசெய்யும் விதமாக கூடுதல் நேரம் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதித்தால் விற்பனை அதிகரிக்கும்.

தாமோதரன், (பட்டாசு கடை உரிமையாளர்):-

நான் 25 வருடங்களுக்கு மேலாக திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் பட்டாசு கடை நடத்தி வருகிறேன். வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறோம். இந்த நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிப்பதால் குடும்பமாக முழுமையான மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகிறது.

தீபாவளி தினத்தன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதால் வீடுகளில் வெடி வாங்குவது குறைந்துள்ளது. விலைவாசி உயர்வால் பட்டாசுகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஆனால் பொதுமக்கள் எப்போதும் போலவே குறிப்பிட்ட தொகைக்கு மட்டுமே பட்டாசுகளை வாங்குகின்றனர். கூடுதலாக வாங்குவதில்லை. குறிப்பாக பட்டாசுக்காக குறிப்பிட்ட தொகையை மட்டுமே அன்று முதல் இன்று வரை செலவு செய்கின்றனர். அந்த குறிப்பிட்ட தொகைக்கு தற்போது குறைவான பட்டாசு கிடைத்தாலும் பரவாயில்லை என்ற மனப்பான்மையில் இருக்கின்றனர். இதனால் பட்டாசு விற்பனை குறைந்துள்ளது.

மேலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பட்டாசு விற்பனையைவிட தற்போது விற்பனை 50 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் விற்பனை குறைந்து பட்டாசு வியாபாரிகள் வேதனையடைகின்றனர்.

திருப்பூரை பொறுத்தவரை தீபாவளி அன்று போலீஸ் கண்காணிப்பு அதிகமாக இருக்கும். அதனால் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வெடி வெடிக்க முடியும். எனவே கூடுதல் நேரமாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கினால் அரசின் விதிமுறையை பொதுமக்கள் மீறாமல் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர்.

இரவில் அதிக நேரம்

வள்ளியம்மாள், (பொதுமக்கள்):-

காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிப்பதால் பொதுமக்கள் இடையூறு இல்லாமல் இருப்பர். குறிப்பாக மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

யமுனா, (15 வேலம்பாளையம்):-

தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு கூடுதல் நேரம் வழங்கினால் நன்றாக இருக்கும். குறிப்பாக இரவு 7 முதல் 9 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கினால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவர். இரவில்தான் அதிகமாக வெடி வெடிக்க குழந்தைகள் ஆசைப்படுகின்றனர். எனவே கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கினால் நன்றாக இருக்கும்.

தொந்தரவு இல்லாமல்

ஜெயலட்சுமி, (புதூர் பிரிவு):-

காலை 6 மணி முதல் 7 மணி வரை குழந்தைகள் அதிகமாக எழுந்திருக்க மாட்டார்கள். இதனால் காலையில் அவர்கள் பட்டாசு வெடிப்பது கஷ்டமான விஷயம். எனவே பட்டாசு வெடிக்க காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் நேரம் நிர்ணயித்தால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவர்.

வெங்கடேஷ், (பி.கே.ஆர். காலனி):-

பட்டாசு வெடிப்பதற்கு நேரம் நிர்ணயித்திருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். ஏனென்றால் காற்று மாசு ஏற்படாது. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமப்பட மாட்டார்கள். மேலும் நோயாளிகளும் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக இருப்பர்.

வெற்றிவேல், (கரட்டாங்காடு):-

வருடத்துக்கு ஒரு நாள் மட்டுமே தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறோம். எனவே குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்காமல் விருப்பப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். அதேசமயம் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாமல் இருக்கும் வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும். குறிப்பாக மருத்துவமனை, முதியோர் இல்லம் போன்ற இடங்களின் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து மற்ற இடங்களில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். இவ்வாறு பட்டாசு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

தகுதியில்லாத வாகனங்கள் சாலையில் ஆயிரக்கணக்கில் ஓடும்போது தீபாவளி திருநாளுக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு என்பது சற்று வருத்தத்தை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.


Next Story