கொக்கு, முயலை வேட்டையாடியவர் கைது
கள்ளத்துப்பாக்கி மூலம் கொக்கு, முயலை வேட்டையாடியவர் கைது
விழுப்புரம்
விழுப்புரம் வனப்பாதுகாப்பு படை குழுவினர் நேற்று மாலை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தேரடி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு ஒருவர் கையில் துப்பாக்கியுடனும், ஒரு பையுடனும் நடந்து சென்றார். உடனே அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் 2 கொக்குகளும், ஒரு முயலும் வேட்டையாடப்பட்டு செத்துக்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி அக்குழுவினர், விழுப்புரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனவர் ஜெயபால், வனக்காப்பாளர்கள் சுப்பிரமணி, தர்மன், வனக்காவலர் செந்தில் ஆகியோர் அங்கு விரைந்து சென்று அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், விழுப்புரம் சாலாமேடு ஆசாகுளம் பகுதியை சேர்ந்த சந்திரன் (வயது 50) என்பதும், அவர் வைத்திருந்தது கள்ளத்துப்பாக்கி என்றும் தெரிந்தது. மேலும் அவர், உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ள நிலையில் கள்ளத்துப்பாக்கி ஒன்றை தயாரித்து அதன் மூலம் இருaவேல்பட்டு ஏரியில் கொக்குகள், முயல் ஆகியவற்றை வேட்டையாடி வந்ததும் மேற்படி விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சந்திரனை வனத்துறையினர் கைது செய்து அவரிடமிருந்த கள்ளத்துப்பாக்கி மற்றும் வேட்டையாடப்பட்ட கொக்குகள், முயல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.