பொதுமக்களிடம் நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டும்- கூடுதல் டி.ஜி.பி. அறிவுரை


பொதுமக்களிடம் நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டும்- கூடுதல் டி.ஜி.பி. அறிவுரை
x

புகார் அளித்தால் உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பகத்தன்மையை பொதுமக்களிடம் உருவாக்க வேண்டும் என்று போலீஸ் நிலைய வரவேற்பாளர்களுக்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் அறிவுரை கூறினார்.

திருச்சி

புகார் அளித்தால் உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பகத்தன்மையை பொதுமக்களிடம் உருவாக்க வேண்டும் என்று போலீஸ் நிலைய வரவேற்பாளர்களுக்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் அறிவுரை கூறினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

திருச்சி மாநகர் மற்றும் திருச்சி சரக அளவிலான காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருச்சி காஜாநகர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) கே.சங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா, திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் சூப்பிரண்டுகள், சுஜித்குமார் (திருச்சி), சுந்தரவதனம் (கரூர்), வந்திதாபாண்டே (புதுக்கோட்டை), சியாமளாதேவி (பெரம்பலூர்), பெரோஸ்கான் அப்துல்லா (அரியலூர்), மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், அன்பு, செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மனுக்கள் பெற்றனர்.

283 மனுக்களுக்கு தீர்வு

கூட்டத்தில் அனைத்து போலீஸ் உதவி கமிஷனர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார் மனுக்கள் மீதும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விசாரணை நடத்தினார்கள். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம், உடனுக்குடன் கிடைத்ததை அடுத்து, மகிழ்ச்சியடைந்த சிலர், கூடுதல் டி.ஜி.பி.யை சந்தித்து நன்றி தெரிவித்து சென்றனர். கூட்டத்தில் 383 புகார் மனுக்கள் பெறப்பட்டு 283 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

போலீஸ் நிலைய வரவேற்பாளர்கள்

இதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் அலுவலகத்தில் நேற்று மாலை திருச்சி மாநகர மற்றும் திருச்சி சரகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீஸ் நிலைய வரவேற்பாளர்கள் 60 பேருடன் கூடுதல் டி.ஜி.பி. கலந்துரையாடினார். அப்போது அவர், "எந்த புகார் வந்தாலும், உடனடியாக கணினியில் பதிவு செய்து, புகார்தாரரை நல்லமுறையில் உபசரித்து, விசாரித்து அனுப்ப வேண்டும். அவர்கள் கொடுத்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டதா? என்று மனுதாரரை விசாரித்து அவர்களின் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும். பொதுமக்கள் மத்தியில், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பகத்தன்மையை போலீஸ் நிலைய வரவேற்பாளர்கள் உருவாக்க வேண்டும்" என்றார்.

பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில், குற்றங்களைதடுக்க வேண்டும், சட்டம்-ஒழுங்கை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். பொதுமக்களிடம் குறைகளை நல்லமுறையில் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடுதல் டி.ஜி.பி. அறிவுரை வழங்கினார்.


Next Story