கடத்தூர் ராஜவாய்க்காலில் முதலை நடமாட்டம்?
கடத்தூர் ராஜவாய்க்காலில் முதலை நடமாட்டம்?
போடிப்பட்டி
கடத்தூர் ராஜவாய்க்காலில் முதலை நடமாட்டம் இருப்பதாக பரவிய செய்தியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
முதலைக்குஞ்சுகள்
உடுமலை அருகே உள்ள அமராவதி அணைப் பகுதிக்கு அருகில் முதலைப் பண்ணை உள்ளது. இங்கு சுமார் நூறு முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இது தவிர அமராவதி அணைப்பகுதியிலும் ஏராளமான முதலைகள் உள்ளது. இந்த நிலையில் அமராவதி அணையில் இருந்து நீர் திறக்கும் சமயங்களில் முதலைக் குஞ்சுகள் தப்பி ஆற்றில் வந்து விடுவதாகவும், முதலைப் பண்ணையில் உள்ள முதலைகளின் சிறிய அளவிலான குட்டிகளை கழுகு உள்ளிட்ட பறவைகள் தூக்கிச் செல்லும் போது தவறி ஆற்றில் விழுந்து விடுவதாகவும் பொதுமக்கள் கூறிவருகின்றனர்.
இதனால் கல்லாபுரம், மடத்துக்குளம், கண்ணாடி புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமராவதி ஆற்றில் முதலைகள் உலா வருவதாக அவ்வப்போது பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மடத்துக்குளத்தை அடுத்த கடத்தூர் பழைய ராஜ வாய்க்காலில் பெரிய அளவிலான முதலை ஒன்று நீந்தி செல்வதைப் பார்த்ததாக விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், ராஜ வாய்க்காலில் பொதுமக்கள் துவைக்கவோ, குளிக்கவோ இறங்க வேண்டாம் என்றும் கால்நடைகளை குடிநீர் அருந்த விட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனால் பொதுமக்களிடையே அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது.
தண்ணீர் நிறுத்தம்
ராஜ வாய்க்கால் மற்றும் கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் முதலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து வாய்க்காலில் மடை அடைக்கப்பட்டு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைக்கப்பட்டது. அதற்குள் அந்த பகுதியில் இருள் சூழ்ந்ததால் தேடுதல் வேட்டையைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். ராஜவாய்க்காலில் அந்த விவசாயி பார்த்தது உண்மையிலேயே முதலை தானா அல்லது வேறு ஏதேனும் மரக்கட்டை போன்ற பொருட்களா என்று ஒரு சிலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். அதே நேரத்தில் அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் உள்ள நிலையில் ராஜ வாய்க்காலில் ஏன் முதலை தப்பி வந்திருக்கக் கூடாது என்று மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனாலும் முதலையால் கால்நடைகளுக்கோ பொது மக்களுக்கோ ஆபத்து ஏற்படாத வண்ணம் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜவாய்க்காலில் முதலை நடமாட்டம் இருப்பதாக பரவிய தகவலால் கடத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-