தமிழகத்தில் குற்றங்கள் குறைந்து வருகின்றது; கூடுதல் டி.ஜி.பி. சங்கர் தகவல்


தமிழகத்தில் குற்றங்கள் குறைந்து வருகின்றது; கூடுதல் டி.ஜி.பி. சங்கர் தகவல்
x

தமிழகத்தில் குற்றங்கள் குறைந்து வருகின்றது என்று கூடுதல் டி.ஜி.பி. சங்கர் கூறினார்.

திருவண்ணாமலை

தமிழகத்தில் குற்றங்கள் குறைந்து வருகின்றது என்று கூடுதல் டி.ஜி.பி. சங்கர் கூறினார்.

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள மண்டபத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் முன்னிலை வகித்தார். வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி வரவேற்றார். இதில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த முகாமில் போலீஸ் நிலையங்களில புகார் அளித்து விசாரணையில் திருப்தி அடையாத 137 மனுக்களும், 437 புதிய மனுக்களும் என மொத்தம் 574 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களின் தன்மைக்கு ஏற்ப மாவட்டத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் மூலம் 533 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை முடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வரக்கூடிய புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார்.

குற்றங்கள் குறைந்தது

மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களின் புகார்களை பெற்று அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி கொடுக்கப்படும் மனுக்கள் விசாரணை செய்யப்படும் போது சம்பந்தப்பட்ட புகார்தாரருக்கு திருப்தி இருக்கிறதா? என்பதை அறிந்து, இல்லை என்றால் அவரை மீண்டும் அழைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பாளர் அமர்த்தப்பட்டு உள்ளனர். புகார் அளிக்க வரக்கூடியவர்கள் எளிதாக புகார் அளிப்பதற்கும், புகாரை பதிவு செய்வதற்கும் அவர்கள் உதவியாக உள்ளனர். புகார் கொடுப்பவர்களுக்கு விரைவாக நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அதுபோன்ற முகாம்கள் நடைபெறுகிறது.

தமிழகத்தில் குற்றங்கள் குறைந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக கடந்த 4 மாதங்களில் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் பெருமளவில் குறைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய மென்பொருள்

அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர், போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அம்மனுக்களை முறையாக பராமரிக்கும் வகையில் புதிய மென்பொருளை போலீஸ் நிலையங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.


Next Story