பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன
x

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன என்று வேலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் கூறினார்.

வேலூர்

ஆலோசனை கூட்டம்

தமிழக காவல்துறை வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் போக்சோ சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன், கார்த்திகேயன், ஆல்பர்ட்ஜான், கிரண்ஸ்ருதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமை தாங்கி 10 மாவட்டங்களில் உள்ள போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை குறித்தும், அந்த வழக்குகளின் தற்போதைய நிலைமை பற்றியும், கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகள் தொடர்பாக தனித்தனியாக கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

குறைந்துள்ளது

இந்திய அளவில் போக்சோ வழக்குகள் தொடர்பான புகார்கள் பதிவாவதில் தமிழகம் 19-வது இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன. இதனை மேலும் குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை 17,478 போக்சோ வழக்குகள் காவல்நிலையத்தில் பதிவாகி உள்ளன. அவற்றில் 1,196 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க போலீசார் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தல், பாலியல் தொந்தரவு, சீண்டல் கொடுத்ததாக புகார்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை விசாரிப்பதில் தாமதம் செய்யக்கூடாது. அதனை உடனடியாக விசாரித்து சட்ட நுணுக்கங்களை நன்கு தெரிந்து போக்சோ வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

காவலன் செயலி

மேலும் காவலன் செயலி, பெண்கள், குழந்தைகள் ஹெல்ப்லைன் எண்கள் 181, 1098-ல் புகார் தெரிவிப்பது மற்றும் அதன்பேரில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும் விளக்கிக் கூற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story