சட்டவிரோத பட்டாசு, கருந்திரி தயாரிப்போர் மீது குற்றவியல் நடவடிக்கை-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு மற்றும் கருந்திரி தயாரிப்பு தொழிலில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்தார்
விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு மற்றும் கருந்திரி தயாரிப்பு தொழிலில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்தார்.
நடவடிக்கை
விருதுநகரில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் சட்டவிரோத பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுவோர் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும் மாவட்ட போலீஸ் நிர்வாகமும் இதுகுறித்து தீவிர சோதனை நடத்தி சட்டவிரோத பட்டாசு மற்றும் கருந்திரி தயாரிப்போர் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கும். பொதுமக்கள் தங்களுக்கு இதுபற்றி தகவல் தெரிந்தால் போலீசாருக்கு தெரிவித்து பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க உதவி செய்ய வேண்டும்.
திருட்டு வழக்குகளில் துப்பு துலக்க நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளது. சாத்தூரில் தொழிலதிபர் வீட்டில் 54 பவுன் நகை திருடு போன சம்பவம் தொடர்பாக விரைவில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருட்டுச் சம்பவங்களை தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி மது விற்பனை செய்வோர், கஞ்சா தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
துரித விசாரணை
மாவட்ட குற்றப்பிரிவில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் விசாரணை தாமதமாவதாக புகார் கூறப்படும் நிலையில் குற்ற பிரிவு போலீசார் பதிவு செய்யப்படும் வழக்குகளில் விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் தரைவழி டெலிபோன் இணைப்புகள் மூலம் மட்டுமே புகார் கூற வாய்ப்புள்ள நிலையில் போலீசார் தரைவழி டெலிபோன் இணைப்பு அழைப்புகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படும்.
பள்ளி மாணவ-மாணவிகள் செல்லும் வழிகளில் வாகன விபத்துக்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் போலீசாரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாணவர்களிடையே போதை தடுப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.