பயிர்க்காப்பீடு செய்ய நவம்பா் 15-ந் தேதி கடைசி நாள்
சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய நவம்பா் 15-ந் தேதி கடைசி நாள் என்று வேளாண்மை உதவி இயக்குனர் கூறினாா்.
திருக்காட்டுப்பள்ளி;
பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுப்பிக்கப்பட்ட பாரத பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டம் நடப்பு சம்பா பருவத்துக்கு தொடங்கி உள்ளது. ஒரு ஏக்கர் சம்பா சாகுபடி செய்ய ரூ.35 ஆயிரத்து 900 செலவினமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.539 மட்டும் பிரீமியம் செலுத்தி தங்கள் நெற்பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம்.அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி வரை சம்பா நெற்பயிருக்கான காப்பீட்டுத் தொகையை செலுத்தலாம். விவசாயிகள் சம்பா நடவு முடிந்தவுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் வாங்கிய சிட்டா அடங்கல், விதைப்புச் சான்று நகல் ஆகியவற்றை பெற்று காப்பீடு செய்து கொள்ள வேண்டும். பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள் தங்கள் வங்கி அல்லது கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.பயிர் கடன் பெற்ற விவசாயிகள் தங்களது காப்பீட்டு பிரிமிய தொகை வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டு விட்டதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பயிர் கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாக காப்பீடு செய்து கொள்ள வேண்டும். பயிர் காப்பீடு செய்யும் போது தங்கள் வழங்கிய ஆவணங்கள் மற்றும் பிரீமிய தொகை செலுத்தியதற்காக வழங்கப்பட்ட ரசீதுகளின் ஜெராக்ஸ் நகல் அவசியம் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.