ரூ.40 கோடி குறுவை பயிர்க்கடன் வழங்க இலக்கு
நாகை மாவட்டத்தில் ரூ.40 கோடி குறுவை பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.40 கோடி குறுவை பயிர்க்கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குறுவை சாகுபடி
காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தேவையான ஆயத்தப்பணிகளான நிலம் உழவு செய்தல், நாற்று விடுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் நிலத்தடி நீர் பாசனம் மூலம் குறுவை சாகுபடி தொடங்கி விட்டது. மேலும் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தையும் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
ரூ.40 கோடி குறுவை பயிர்க்கடன்
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் குறுவை பயிர்கடன் வழங்க இந்த ஆண்டு ரூ.40 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே கடன் தேவைப்படும் விவசாயிகள், சிட்டா அடங்கல் நகலுடன் தாங்கள் உறுப்பினராக உள்ள சங்கத்தில் கடன் மனு அளிக்கலாம்.
தனி நபர் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரையில் கடன் பெறலாம். நகை அடமானத்தின் பேரில் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். ஏக்கர் ஒன்றுக்கு பயிர்க்கடன் ரொக்கமாக ரூ.28,550-ம் பொருள் பகுதியாக ரூ.7,550-ம் ஆக மொத்தம் ரூ.36,100 வழங்கப்படும்.
கட்டணம் செலுத்தி உறுப்பினராகலாம்
மேலும் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே குறுவை சாகுபடி செய்யும் தகுதி உடைய அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் கூட்டுறவுத்துறை மூலம் பயிர்க்கடன் வழங்கப்படும். மேலும், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத்தொகை மற்றும் நுழைவுக்கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.
புகார் தெரிவிக்கலாம்
இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் 7338721201 என்ற எண்ணில் நாகை மண்டல இணைப்பதிவாளரையோ, 9087946937 என்ற எண்ணில் துணைப்பதிவாளரையோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.