திடீர் மழையால் அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் சேதம்
கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் பெய்த திடீர் மழையால் அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் பெய்த திடீர் மழையால் அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
குறுவை சாகுபடி
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டாரத்தில் உள்ள 43 கிராமங்களில் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் போதிய தண்ணீர் இல்லாததால் பல்வேறு இடங்களில் குறுவை பயிர்கள் கருகியது.
சில இடங்களில் எஞ்சிய பயிர்களை வாய்க்காலில் வரும் தண்ணீரை மோட்டார் மூலம் வயல்களுக்கு பாய்ச்சி விவசாயிகள் குறுவை பயிர்களை காப்பாற்றி வந்தனர். ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையான வெயில் தாக்கம் மற்றும் மழை பெய்யாத காரணத்தால் பயிர்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வந்தது.
திடீர் மழை
இந்த நிலையில் கீழ்வேளூர் ஒன்றியம் ராதாமங்கலம், வெண்மணி, கடலாக்குடி, திருப்பஞ்சனம், 75 அணக்குடி, கிள்ளுக்குடி, அய்யடிமங்கலம், காரியமங்கலம், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் 90 நாட்களான பயிர்கள் பயிரிடப்பட்டு இன்னும் 10 நாட்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இடியுடன் பெய்த திடீர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன. மேலும் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து உள்ளனர்.
பயிர்கள் சாய்ந்தன
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்ய இருந்த நேரத்தில் திடீரென பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்து உள்ளன.
எனவே தமிழக அரசு வேளாண் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.