மக்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்த பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது


மக்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்த பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது
x
தினத்தந்தி 29 July 2023 1:15 AM IST (Updated: 29 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

மோசடி புகாரில் சிக்கிய நியோமேக்ஸ் நிதிநிறுவனத்தினருக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மக்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்த பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை

மதுரை

மோசடி புகாரில் சிக்கிய நியோமேக்ஸ் நிதிநிறுவனத்தினருக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மக்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்த பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

நிதி நிறுவன மோசடி

மதுரையை தலைமை இடமாகக் கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வழங்குவதாகவும், பின்னர் இரட்டிப்பு தொகையை முதிர்வுத்தொகையாக வழங்குகிறோம் என ஆசைவார்த்தி கூறியதாகவும். இதை நம்பி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அவர்கள் கூறியபடி, பணத்தை திரும்ப தரவில்லை என புகார் எழுந்தது. இந்த நிதி நிறுவனம், சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை மோசடி செய்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதன் அடிப்படையில் நிதி நிறுவன இயக்குனர்கள் சிலர் கைதானார்கள். மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

வெளிநாடுகளில் முதலீடு

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்ட மனு ஏற்கனவே தள்ளுபடியானது. தற்போது கமலக்கண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் உள்ளிட்டோர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் ரவி ஆஜராகி, மனுதாரர்கள் மீது நிதி மோசடி புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் வசூலித்த தொகையை வெளிநாடுகளில் தங்கள் பெயரில் முதலீடு செய்தது தெரியவந்துள்ளது. இதுசம்பந்தமாக மனுதாரர்களிடம் நேரில் விசாரித்தால்தான் மேல்நடவடிக்கை எடுக்க முடியும். எனவே அவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என்று வாதாடினார்.

நியோமேக்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல்கள், மனுதாரர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் அரசு விதிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வந்தன. முதலீட்டாளர்களுக்கான தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்வதற்கு தயாராக உள்ளோம். இதை கருத்தில் கொண்டு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என வாதாடினர்.

வழக்கின் நிலை என்ன?

இதற்கிடையே மனுதாரர்களின் நிதிநிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் 50-க்கும் மேற்பட்ட இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை தாக்கல் செய்த வக்கீல்கள் ஆஜராகி, நிதி நிறுவனத்தினர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மோசடி செய்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் பணம் திரும்ப கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் நிலை அறிக்கையை போலீஸ் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story