நாமக்கல்லில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
கோடைவிடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், நேற்று நாமக்கல் பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், முதலில் ஜூன் மாதம் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் பல்வேறு இடங்களில் அனல்காற்று வீசியது. எனவே மாணவர்களின் நலன்கருதி பள்ளி திறப்பை தமிழக அரசு 12-ந் தேதிக்கு மீண்டும் தள்ளி வைத்தது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இதையொட்டி அரசின் உத்தரவுபடி அனைத்து பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகங்களும் தூய்மைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே கடந்த சில நாட்களாக சீருடை, எழுது பொருட்கள், நோட்டுகள் வாங்க மாணவ, மாணவிகள் கடைவீதிகளை நோக்கி படையெடுத்தனர்.
அலைமோதிய கூட்டம்
நேற்று கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு திரும்பினர். இதனால் பஸ்நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதை கட்டுப்படுத்த அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும், அது போதுமானதாக இல்லை என பயணிகள் குற்றம்சாட்டினர். நாமக்கல் பஸ்நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ஈரோடு, கோவை செல்லும் பஸ்களில் பயணிகள் முண்டியடித்து ஏறுவதை பார்க்க முடிந்தது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதற்கிடையே பள்ளி திறக்கும் நாளான இன்றே மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை நாளைமறுநாள் (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.