திற்பரப்பில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. தண்ணீர் அதிகமாக விழுந்ததால் பாதுகாப்பு கருதி அருவியில் 2 இடங்களில் மட்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
திருவட்டார்:
திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. தண்ணீர் அதிகமாக விழுந்ததால் பாதுகாப்பு கருதி அருவியில் 2 இடங்களில் மட்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கடந்த ஆண்டு வரை மேமாதம் என்றாலே கோடை விடுமுறை காலமாக இருந்தது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டதால் தேர்வுகளும் தாமதமாக முடிந்து கடந்த 13-ந் தேதி தான் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் பின்னரே கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் வரத்தொடங்கினர்.
வழக்கம்போல் மே மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மக்கள் கூட்டத்தால் சுற்றுலா தலங்கள் திக்குமுக்காடும். அதுப்போலவே இந்த ஆண்டும் குமரி மாவட்ட சுற்றுலா தலங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
திற்பரப்பு அருவியில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் கூட்டம் அலைமோதியது. இங்குள்ள விடுதிகளில் ஏராளமான வெளியூர் சுற்றுலா பயணிகள் தங்கி இருந்து காலை-மாலை என தொடர்ந்து குளியல் போடுவதைக் காணமுடிந்தது.
ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
மலையோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் கோதையாற்றில் தற்போது தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து வருகிறது. இதனால் அருவியில் தண்ணீர் பரந்து விரிந்து பாறைகள் தெரியாதை வகையில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தண்ணீர் அதிகம் பாய்வதால் அருவியின் முதல் 2 தளங்களில் மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் தடுப்பு அமைத்துள்ளனர்.
நேற்று மே மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அருவியில் குளிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அவ்வப்போது சாரல் மழையும் பெய்வதால் அருவிப்பகுதி குளு குளுவென ரம்மியமாக காட்சியளிக்கிறது.
சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப பெண்கள் உடைமாற்றும் அறை போதிய அளவில் இல்லாததால் பெண்கள் குளித்து விட்டு வெகுநேரம் காத்திருந்து உடைமாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், உடைமாற்ற கூடுதல் வசதிகள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் அருவியின் மேல் உள்ள தடுப்பணையில்அணைக்கட்டில் உல்லாச படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மாத்தூர் தொட்டிப்பாலம்
ஆசியாவிலேயே நீளமான, உயரமான மாத்தூர் தொட்டிப்பாலத்திலும் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் பாலத்தில் நடந்து சுற்றி வளர்ந்திருக்கும் மரங்களையும், பரளியாற்றையும் பார்த்து ரசித்தனர். பின்னர், பாலத்தின் கீழே ஓடும் பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர்.