கடைகளில் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் அலைமோதியது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் அலைமோதியது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களையிழந்து இருந்தது. இந்த ஆண்டு கொரோனா குறைந்துள்ளதால் பொதுமக்கள் வழக்கம் போல பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் புதிய துணிமணிகள் வாங்க பெங்களூரு சாலை, கே.தியேட்டர் சாலை உள்பட அனைத்து இடங்களிலும் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் கிருஷ்ணகிரி பகுதியில் நோன்பு கடைபிடிக்கப்படுவதால் நோன்பு கயிறு, பானைகள், பூஜை பொருட்களும் அதிக அளவில் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
பொதுமக்கள் ஆர்வம்
மேலும் பூக்கடைகளிலும், இனிப்பு கடைகளிலும், பழ கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு புதிய ரகங்களுடன் ஏராளமான பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை வாங்க ஏராளமான பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள். இதனால் கிருஷ்ணகிரி நகரில் எங்கும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது.
சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஓசூர், பெங்களூரு நகரங்களில் உள்ளவர்கள் தங்களின் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு கார்களிலும், பஸ்களிலும் புறப்பட்டு சென்றனர். இதனால் கிருஷ்ணகிரியில் சுங்கச்சாவடியில் நெரிசல் காணப்பட்டது.
போலீசார் பாதுகாப்பு
மேலும் ஓட்டல்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. பண்டிகையை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் தலைமையில் மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.