பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு: பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
நெல்லை:
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இதையொட்டி பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பள்ளிகள் திறப்பு
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் சீராக நடைபெற்று வந்தது. தொடர்ந்து பொதுத்தேர்வுகள் நடத்தி, கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலும் இன்று தொடங்குகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவுப்படி, தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர். கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் வகுப்பறைகள், பெஞ்சு, மேஜைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
நோட்டு, புத்தகங்கள்
நெல்லை மாவட்டத்தில் 1,217 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும், 318 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. இன்று பள்ளிகள் திறந்ததும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வாரம் முழுவதும் மாணவ-மாணவிகளுக்கு கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் புத்துணர்வு வகுப்புகள் நடத்தப்படுகிறது. அடுத்த வாரத்தில் இருந்து பாடங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பு விதிமுறைகளான முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பஸ், ரெயில்களில் கூட்டம்
பள்ளிகள் திறப்பதையொட்டி கடந்த 2 நாட்களாக பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கோடை விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் சென்றவர்கள் தங்களது பள்ளிகள் அமைந்திருக்கும் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
விடுப்பு இல்லை
இன்று காலை ஒட்டுமொத்தமாக பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் புறப்பட்டு செல்வார்கள் என்பதால், நெல்லை, தென்காசி, தூத்துக்குடிக்கு பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 900 பஸ்களும் கண்டிப்பாக இயக்கப்பட வேண்டும் என்றும், டிரைவர், கண்டக்டர்களுக்கு விடுப்பு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் நெல்லையில் இருந்தும், நெல்லை வழியாகவும் இயக்கப்பட்ட ரெயில்களில் நேற்று பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வருகிற 20-ந்தேதி பிளஸ்-2 வகுப்புகளும், வருகிற 27-ந்தேதி பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்கப்படுகிறது.