சுற்றுலாதலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்


சுற்றுலாதலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x

கோடை விடுமுறையின் கடைசி நாளான நேற்று குமரி சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கோடை விடுமுறையின் கடைசி நாளான நேற்று குமரி சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

விடுமுறை நிறைவு

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக இருக்கும்.

இந்தநிலையில் பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடைவிடுமுறை நேற்றுடன் முடிந்து இன்று(திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.

கன்னியாகுமரியில் குவிந்தனர்

இதையொட்டி கோடை விடுமுறையின் கடைசி நாளான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதிகாலையிலேயே கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் முக்கடல் சங்கம கடற்கரையில் திரண்டு சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். பின்னர் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி விட்டு பகவதி அம்மன் கோவிவில் சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர், உற்சாகத்துடன் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்து விட்டு திரும்பினார்.

போலீஸ் பாதுகாப்பு

மேலும், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதை காணமுடிந்தது.

சுற்றுலா பயணிகளின் வருகையால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திற்பரப்பு அருவி

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மிதமாக கொட்டிய தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர், அருவின் மேல்பகுதியில் உள்ள தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்தபடி படகில் சவாரி செய்தனர்.

இதேபோல், மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, பேச்சிப்பாறை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காலை முதல் மாலை வரை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. அவ்வாறு வருகை தந்த சுற்றுலா பயணிகள், கடைகளில் விற்பனை செய்யப்பட்ட செங்கவருக்கை மாம்பழம், அயனிபலாப்பழம், நுங்கு ஆகியவற்றை ஆர்வத்துடன் வாங்கி ருசித்து மகிழ்ந்தனர்.


Next Story