கடைவீதிகளில் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்


கடைவீதிகளில் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
x

தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

திருச்சி

தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

இன்று தீபாவளி

தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்று பொதுமக்கள் தீபாவளி பொருட்களை வாங்க ஆர்வத்துடன் கடைவீதிளில் குவிந்தனர்.. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக தீபாவளி பண்டிகையை சரிவர கொண்டாட முடியாமல் தவித்து வந்தனர்.

தற்போது எந்தவித கட்டுப்பாடின்றி மக்கள் தீபாவளியை வரவேற்று கொண்டாடும் வகையில் நேற்று காலை முதல் மாலை வரை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைவீதி, சாலைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. திருச்சி பெரிய கடைவீதி, சின்னக்கடை வீதி, சிங்காரத்தோப்பு, என்.எஸ்.பி.ரோடு, சத்திரம் பஸ் நிலையம், ஸ்ரீரங்கம், தில்லை நகர், காந்திமார்க்கெட், பாலக்கரை, உறையூர், கரூர் பைபாஸ் ரோடு, சாலை ரோடு, மத்திய பஸ் நிலையம் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட் டம் அலைமோதியது.

போக்குவரத்து நெரிசல்

இதனால் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஒலி பெருக்கி மூலம் போக்குவரத்தை சரி செய்யும் நிலை இருந்தது. இதில் குழந்தைகளுக்கான உடைகள், புடவைகள், விளையாட்டு பொருட்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடை, இனிப்பு, பட்டாசு கடைகள், வீட்டு உபயோக பொருட்களான எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், பாத்திரங்கள் மற்றும் செருப்பு, வாகன விற்பனை நிலையங்கள், என அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கடந்த 5 நாட்களில் திருச்சி மாவட்டத்தில் கடை வீதிகளில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பொருட்கள் வாங்கி சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்தது. நேற்று மழை பெய்யாததால் பொதுமக்கள் சிரமம் இன்றி பொருட்கள் வாங்கி சென்றனர்.


Next Story